ஆலங்குளம் கிராமத்தின் பாடசாலைக்கான களதரிசனம்

பாடசாலையால் எமது அறக்கட்டளைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக 53.7 Km தூரம் பயணம்செய்து மட்டக்களப்பு மாவட்டத்திலே எல்லை கிராமமாக காணப்படும் ஆலங்குளம் அ.த.க பாடசாலைக்கு சென்று எமது குழுவால் மேற்கொள்ளப்பட்ட களத்தரிசனத்தில் இந்த கிராமத்தில் 320 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அரச உத்தியோகமோ, தனியார் துறையிலோ தொழில் செய்யக்கூடியவர்கள் யாரும் இல்லை. காரணம் தரம் 9 வரையும் கல்விகற்கும் வசதியுடனான பாடசாலையே உள்ளது. சுற்றிவர இருக்கும் 2 கிராமங்களிலும் பாடசாலை இல்லாததால் அந்த கிராமங்களிற்கும் பொதுவான பாடசாலையாக காணப்படுகின்றது.

இந்த வருடம் தான் முதல் முதலாக 3 மாணவிகள் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இவற்றிற்கு முக்கிய காரணம் க.பொ.த சாதாரண தரம் கற்பதற்கு இவர்கள் இந்த கிராமத்தில் இருந்து 3.8 Km தூரத்தில் உள்ள காயன்கேணி கிராமத்தில் உள்ள பாடசாலைக்குத்தான் செல்லவேண்டும், ஆனாலும் இதற்கான போக்குவரத்து வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றது. இவ்வாறான காரணங்களால் பாடசாலைக்கல்வியினை தொடர முடியாமல் சிறுவயது கல்யாணம், திறனற்ற தொழிலாளர்களாக வெளிநாட்டுக்கு செல்லுதல், விவசாயக் கூலி என்று தமது வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கின்றனர்.

பாடசாலை : ஆலங்குளம் தமிழ் வித்தியாலயம்.
ஆசிரியர்கள் – 11,
அபிவிருத்தி உத்தியோகத்தர். 4,
மாணவர் எண்ணிக்கை 130, (தரம் 1-5 – 82, தரம் 6-9 – 48 )
சுற்று சூழல் 3 கிராமங்கள்,
அடுத்த ஆண்டு தரம் 10, 11 தரங்களும் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலான பாடசாலையின் சில கோரிக்கைகள்.

  1. முதன்முதலாக பரிசளிப்பு விழாவினை நடாத்துவதும். அதில் பங்குபற்றும் மாணவர்களிற்கு சில்வர் தண்ணீர் போத்தல் பரிசாக கிடைக்கும் பட்சத்தில் மாணவர்களின் மனநிலை உற்சாகம் ஏற்படும்.
  2. கணித, விஞ்ஞான பாடங்களிற்கான ஆசிரியர்கள் இன்மை.
  3. மகிழ்ச்சியான கற்றல் சூழலை உருவாக்குவதற்கு சிறுவர் விளையாட்டு முற்றம் சீர்குலைந்துள்ளது. அதனை சீர்செய்தல்.
  4. ஏனைய இணைப்பாட விதான செயற்பாடுகளிற்கான விளையாட்டு உபகரணங்கள், கணினி, இசைக்கருவிகள் தேவையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *