எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினரால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனபாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் அவர்கள் வழிதவறி செல்வதனை தடுக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கிய வாழ்வியலும் வழிகாட்டலும் என்னும் பயிற்சி முறைமையினை ஒரு நாள் பயிற்சி பட்டறை மற்றும் 3 மாத பயிற்சி என எதிர்கால சந்ததியினை வலுப்படுத்தும் ஒரு போராட்டமாக வடகிழக்கு மற்றும் மலையகம் நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் மலையக பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைவாக பது/ஊவா ஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள் மற்றும் உயர்தர பிரிவு மாணவர்களுக்கான அறிமுக வாழ்வியல் பயிற்சி பட்டறை எமது வளவாளர்கள் குழுவால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
எமது திட்டப் பிரதேசங்களையும் தாண்டி மலையக மக்களுக்கும் எம் சேவையினை வழங்க தொடர்பினை ஏற்படுத்திய எமது கல்லூரியின் அதிபர் எஸ்.சந்திரசேகரம் அவர்களுக்கும், பாடசாலையில் ஏற்பாடுகளை செய்த அதிபர் திரு.எஸ்.கண்ணியமூர்த்தி அவர்களுக்கும் பயிற்சியிப் பட்டறையினை சிறப்பாக நடாத்திய எமது வளவாளர்களுக்கும் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகளிற்கு எமது அனுபவத்தையும், பெற்றுக்கொண்ட திறனையும் சமூகப்பணி வளவாளர்களாக நாங்கள் மேற்கொண்டாலும் மேலதிகமான காகிதாதிகள், ஏனைய செயற்பாட்டு பயிற்சிக்கான பொருட்கள் தேவையாக உள்ளது. எனவே எமது அறக்கட்டளை உறவுகள் உங்களால் முடிந்த பங்களிப்பினை வழங்குமிடத்து இம் மாணவர்களிற்கான மாற்றத்தினை எம்மால் ஏற்படுத்த முடியும்.