சமூகத்தில் மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சிறுவர் பராமரிப்புத் திட்டத்தினூடாக புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் பாலர் பாடசாலைகளைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான போசாக்கான உணவு மாணவர்களுக்கான சீருடை, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், எமது பாலர் பாடசாலை ஆசிரியர்களை தொழில் ரீதியாக மாத்திரமின்றி தனிமனிதனாகவும் வலுவூட்டும் வகையில் மற்றும் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறார்களில் மறைமுகமாக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் ஆசிரியர்களுக்கான அடிப்படைக் கணிணி மற்றும் ஆங்கிலப் பயிற்சி நெறியானது கடந்த மூன்று மாதகாலமாக நடாத்தப்பட்டது.
இப்பயிற்சி நெறியின் இறுதிநாள் நிகழ்வானது எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றதோடு எமது அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்டமுகாமையாளருட்பட அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பயிற்சி தொடர்பான காட்சிப்படுத்தலைத் தொடர்ந்து ஆசிரியர்களின் குழு நிகழ்வுகளும் பாலர் பாடசாலைகளில் இவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் சம்பந்தமான கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறியை சிறப்பாக நடாத்த
எம்முடன் இணைந்து செயற்பட்ட ஆங்கில வளவாளர் செல்வி.அணுசதுர்த்திகா மற்றும் கணினி வளவாளர் செல்வி. பூஜிதா அவர்களுக்கும் எமது அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவிப்பதோடு பாலர் பாடசாலைகளை பொறுப்பெடுத்து தமது பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் எமது அறக்கட்டளையின் உறவுகளுக்கும் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு 2 பாலர் பாடசாலைக்கான மாதாந்த உதவிகள் தேவைப்படுவதால் உதவிட முன்வரும் அறக்கட்டளை உறவுகள் தொடர்புகொள்வதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.