United board of Christian Higher Education in Asia இன் ஒருங்கிணைப்பினூடாக இந்திய சமுதாய கல்லூரிகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தினால் (ICRDCE) மட்டக்களப்பிலிருந்து 3 தொழிற்பயிற்சி நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சமுதாய கல்லூரி முறைமை மற்றும் வாழ்வியல் பயிற்றுவிக்கும் 2 வாரகால TOT பயிற்சி பட்டறைக்கு எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவையாளர்கள் கடந்த வருடம் செப்ரம்பர் மாதம் இந்தியா சென்று வாழ்க்கைத் திறன் பயிற்சியைப் பெற்றிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக எமக்கான பயிற்சி வழங்கிய ICRDCE மற்றும் அதற்கான நிதியுதவியினை வழங்கிய United board நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் எமது கல்லூரியின் செயற்பாடுகளை பார்வையிட வருகைதந்திருந்தனர்.
அவர்களின் வருகையின் போது ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள புகலிடத்தில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களிற்காக புகலிடம் சமுதாய கல்லூரி திறந்து வைக்கப்பட்டதோடு அச்சிறுவர்களிற்கான விசேட பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அதன் அடுத்த கட்டமாக எமது கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கைத்திறன் பயிற்சியைப் பாடநெறியாக வடிவமைத்து வழங்கியதைத் தொடர்ந்து விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை உள்ளடங்கலாக 3 தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அமெரிக்காவின் United Board நிறுவனத்திலிருந்து வருகை தந்த குழுவினர், ICRDCE நிறுவனத்தினர், மியானி தொழிநுட்பவியல் கல்லூரி மற்றும் பரியோவான் சென்ஜோன்ஸ் கல்லூரி ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது ICRDCE குழுவினரால் எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் கௌரவிக்கப்பட்டதோடு எமது விவேகானந்த குடும்பத்தின் சார்பாக அவர்களுக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
60 இற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் தமக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கைத்திறன் பயிற்சியால் அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் அவர்களது எதிர்கால இலட்சியங்களையும் உள்ளடக்கியதாக அவர்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமை அனைவருக்கும் இந்த பயிற்சியின் முக்கியத்துவத்தினை உணர்த்தியது.
தடம்மாறி செல்லும் ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும் வாழ்க்கைத்திறன் விதைக்கப்படுகையில் இன்றளவில் வாழ்வியலால் ஏற்படுத்தப்படும் தனி மனித மாற்றமானது நாளைய சமுதாய மாற்றமாக விரிவடைந்து செல்லும் என்பதில் சிறிதும் மாற்றமில்லை.
இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல, அவர்கள் பயன்படுத்தப்படாதவர்கள். வழிதவறிப்போகும் எம் இளைய தலைமுறையினருக்கு அவர்களின் வாழ்வினை உணர்த்திடும் இப்பயிற்சியின் விசேட தன்மை அதனை அவர்கள் பயிற்சியினை பூர்த்தி செய்த பின்னரே உணர்கின்றனர்.