பின்தங்கிய பிரதேசங்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் காணப்படும் இளைஞர் யுவதிகளை முன்னேற்றும் ஒரு செயற்பாடாக இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் பாடசாலைக் கல்வியினை பூர்த்தி செய்ய முடியாத, பல்கலைக்கழக வாய்ப்பினை தவறவிட்டு தமது எதிர்கால வாழ்வினை கேள்விக்குறியாக்கிய இளைஞர், யுவதிகளை அடிப்படையாக கொண்டு மாற்றுக்கல்வி முறையில் வாழ்வியலும் வழிகாட்டலும் என்ற விதத்தில் தொழில்ப்பயிற்சிகளை வழங்கும் சமுதாயக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக இந்த மனிதநேய சமுதாய கல்லூரி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதிகஸ்ட பிரதேசமாகவும், பின்தங்கிய பல கிராமங்களை உள்ளடக்கிய கரடியனாறு பிரதேசத்தில் மட்டக்களப்பு மேற்கு வலயகல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மமே/கரடியனாறு மகாவித்தியாலயத்தின் தனியான கட்டட தொகுதியில் வலயக்கல்வி அலுவலகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் மனித நேய நிதியத்தின் அமெரிக்க நாட்டின் பொறுப்பாளர் திரு.கை.அரவிந்தன் மற்றும் அவரது துணைவியார் அவர்களாலும், வலயக்கல்வி அலுவலக திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.யோ.சஞ்சீவன் மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் ஆகியோரினால் மனிதநேய சமுதாய கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆயித்தியலை ஆருட்தந்தை மற்றும் அருட் சகோதரி, அப்பிரதேச பாடசாலை அதிபர்கள், தொண்டு நிறுவன பொறுப்பதிகாரிகள், சமூக நலன்விரும்பிகள், எமது பணியாளர் குழாம், பயிற்சி பெறவிருக்கும் பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நீண்ட கால நன்கொடையாளராக எம்முடன் இணைந்து எமது பல்வேறு விதமான செயற்பாடுகளுக்காகத் தமது நிதி அனுசரணையை வழங்கிக் கொண்டிருக்கும் மனிதநேய நம்பிக்கை நிதியத்தினருக்கு எமது அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.