ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நலனுக்காகவும் தமது ஆணித்தரமான வார்த்தைகள் மூலம், உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வை விழிப்புறச் செய்து எமது சமூகத்தில் ஆன்மீக ஞான ஒளி புகட்டி, மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தி, இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் தம் வாழ்வையே அர்ப்பணித்தவர் சுவாமி விவேகானந்தர். இன்று சுவாமி விவேகானந்தரின் 162 வது ஜனன தினமானது எமது விவேகானந்த தொழிநுட்பக் கல்லூரியில் சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு பூஜைகளும் நடாத்தப்பட்டதோடு எமது விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது. அவ்வாறே முல்லைத்தீவு அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திலும் சிறப்பு பூஜைகளும் இடம்பெற்று உணவுப் பொதி வழங்கும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய அறங்காவலரும் நிர்வாகத் தலைவருமான கலாநிதி.பரமநாதன் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
” ஏழை சிறுவன் ஒருவன் கல்வியை நாடிப்போக முடியாவிட்டால் ; கல்விதான் அவனை நாடி போக வேண்டும் ” எனும் விவேகானந்தரின் கூற்றுக்கிணங்க எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக மாணவர்களின் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கப்படுவது ஒரு பாரிய செயற்பாடாக முன்னெடுக்கப்படுவது வழக்கமானபோதிலும் இன்றைய தினம் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க மூன்று மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் எமது தொழில்நுட்பவியல் கல்லூரியில் வழங்கி வைக்கப்பட்டதோடு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் கள உத்தியோகத்தர்கள் இருவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறே சுவாமி விவேகானந்தரின் ஜனன தினத்தினை முன்னிட்டு ‘உதிரம் கொடுப்போம் ; உயிரைக் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வானது எமது கல்லூரியால் சிறப்பாக நடாத்தப்பட்டதோடு இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது சமுதாய அறக்கட்டளையின் பசுமைப்புரட்சி திட்டத்தினூடாக மரக்கன்றுகளை வழங்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டமை சிறப்பானதாகும்.
” பூக்களாக இருக்காதே ! உதிர்ந்து விடுவாய், பூக்கும் செடிகளாக இரு ; பூத்துக் கொண்டே இருப்பாய் ” எனும் வாக்கிற்கிணங்க வித்தகராம் சுவாமி விவேகானந்தரின் வழிவந்த நாமும் சமுதாய அறக்கட்டளையினூடாக எமது சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வலுவூட்டல்களினூடாக எப்பொழுதும் எமது சமுதாயத்தினரை மலர்விப்பதே எமது பாரிய நோக்கமாகும்.
நாமும் மலர்ந்து எமது சமுதாயத்தினரையும் மலரச்செய்வோம். அதற்கிணங்க இன்றைய நாளில் எம்முடன் பயணித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.