இலண்டன் கனகதுர்கை அம்மன் ஆலயத் தலைவரின் மட்டக்களப்பு விஜயம்

இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்காக இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினர் ஆலயத்தின் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை வழங்கி சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக மனிதநேயப் பணிகளை ஆற்றிவருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு பிரதேசத்தில் அவர்களுடைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசங்களைப் பார்வையிடும் வண்ணம் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தலைவர் வைத்தியகலாநிதி. வே. பரமநாதன் அவர்கள்,
அறங்காவலர் சபை உறுப்பினர் பேராசிரியர்.ஸ்ரீரங்கன் அவர்கள், அறங்காவலர் சபை உறுப்பினர் திரு. சிவலோகன் அவர்களுடன் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் ஆகியோர் களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

அதற்கிணங்க புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள சமூக நலன்புரி அமைப்பு மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் செயற்பாடுகளையும் பார்வையிட்டு அதிபர் மற்றும் சக சேவையாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் அங்கு காணப்படும் பிரச்சனைகள் மற்றும் வளங்களுக்கான தேவைகளைக் கேட்டறிந்ததோடு ஆலயத் தலைவர் வைத்தியகலாநிதி.வே. பரமநாதன் அவர்களது சேவை பாராட்டப்பட்டு பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடுத்த கட்டமாக இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரால் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொம்மாதுறைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலய சமுதாயக் கல்லூரி மற்றும் கொம்மாதுறை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினரின் செயற்பாடுகள் தொடர்பாக மேற்பார்வையைத் தொடர்ந்து மாணவர்களின் பயிற்சியின் பின்னரான அடைவுமட்டங்கள், வாழ்க்கைத்திறன் பயிற்சியால் ஏற்பட்ட மாற்றம், எதிர்காலம் பற்றிய தெளிவு போன்றவற்றைக் குறித்து பெரிதும் திருப்தியடைந்ததோடு இவ்வாறான செயற்பாடுகளை நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் இவ்வாறான மனிதநேயப் பணிகளின் மூலம் 35 வருடங்களுக்கு மேலாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆலயத்திற்கான நிதியில் ஒரு பகுதியை இவ்வாறான செயற்றிட்டங்களுக்காக மக்களின் சேவைக்காகப் பயன்படுத்துவது மிகச் சிறந்த செயற்பாடு மட்டுமன்றி எமது இன்றைய சமுதாயத்திற்கான பாரிய பங்களிப்பாகும். இவ்வாறான பணிகளை விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக ஆற்றிவரும் ஆலயத் தலைவர் வைத்தியகலாநிதி.வே.பரமநாதன், மற்றும் ஆலய நிர்வாகத்தினருக்கும் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *