தொட்டிலில் சேயாகி, தொலைவுகளை மாணவியாய் விழி துடைக்கும் தோழியாய், விரல் கோர்க்கும் காதலியாய், வழித்துணை காண் தாரமாய் – அவள் வாழ்வளிக்கும் தாயாகி ஈற்றில் ஒளிபடைக்கும் ஓர் சமூகம் தனை வளர்க்கும் தலைவியாய் பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் என வாழ்வின் ஒவ்வொரு படியிலும் துணைநிற்பவள் பெண். அதன் பிரகாரம் பெண்மையின்றி அமையாது பேர் உலகு என்பர். அதற்கிணங்க, எமது சமுதாயத்தின் மகளிருக்கான அங்கீகாரத்தை வழங்குவது எமது கடமையாகும்.
அந்த வகையில் எமது விவேகானந்த குடும்பத்தின் மகளிரை கௌரவிக்கும் வண்ணம் மகளிர் தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டதோடு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா நிறுவனம், சமூக நலன்புரி அமைப்பு உள்ளிட்ட அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பெண்களின் முக்கியத்துவம் மற்றும் சமகாலப் பெண்களின் சமூகத்திற்கான பங்களிப்பு தொடர்பில் எமது நிறைவேற்றுப் பணிப்பாளரால் சிறப்பாக உரையாற்றப்பட்டதோடு விவேகானந்த குடும்பத்தின் பெண்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மகளிர் தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மங்கையாய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா ….