வறுமை என்பது உணவினால் என்பதனை விட, எமது மாவட்டத்தில் கல்வி மற்றும் தகவல் வறுமையுமே அதிகம் காணப்படுகின்றது. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களிற்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு பற்றி தெரியவில்லை,
பல்கலைக்கழகங்கள் பற்றிய தெளிவில்லை, மட்டக்களப்பில் திறந்த பல்கலைகக்கழம் இருப்பது தெரியவில்லை, அரசினால் உயர் கற்றலுக்கு மாணவர்களிற்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி தெரியவில்லை, க.பொ.த உயர்தரத்திற்கு பின்னரான அவர்களின் வாழ்க்கை திட்டமிடல் பற்றி தெரியவில்லை.. ஆனால் பல்கலைகழகம் கட்டாயம் செல்வேன் என்று மட்டும் கூறுகின்றனர்.
உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தியடைந்து வெட்டுப்புள்ளியினை பெற்ற அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்ல தகுதியுடையவர்கள் என்பதனை தெளிவூட்டுவோம்.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தெரிவு உயர்கல்வியினையும் அரசாங்கத்தின் உதவியில் இலவசமாக கற்பதற்கே… அவ்வாறு கிடைக்காத சந்தர்ப்பங்களில் வெளிவாரி கற்கைகள், திறந்த பல்கலைக்கழக கற்கைகள், கடன் அடிப்படையிலான கற்கைகள், இதனை விட அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள், நிறுவகங்கள் என்பவற்றில் பயிற்சியினை மேற்கொள்ளலாம் என்ற தெளிவினை வழங்கவேண்டியிருக்கின்றது.
இவ்வாறான தகவல்களை வழங்கி அவர்களிற்கு பட்டப்படிப்பு ஒன்றை தொடர்வதற்கான வழிகாட்டலையும், அடிப்படை கணினி அறிவினையும் வழங்கிடும் 3 மாத கால இலவச பயிற்சிக்கு 20 வறுமைநிலையில் உள்ள ஆர்வமுள்ள மாணவர்களிற்கு புலமைப்பரிசில் மூலம் தொடர் உதவியினை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சியினை தொடரவிருக்கும் மாணவர்களிற்கு மனித நேய நிதியம் உதவி வருகின்றது.
அதன் அடிப்படையில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் தெரிவுசெய்யபட்ட மாணவர்களிற்கு மனித நேய நிதியத்தின் உதவியுடனான 3வது தொகுதி மாணவர்களை இணைத்திடுவதற்கான பயிற்சி பற்றிய தெளிவூட்டலும், அதற்கான நேர்முகப்பரீட்சையும் கல்லூரியின் செங்கலடி கிளையில் கல்லூரி பணிப்பாளர், மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் முகாமையாளர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.