பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான அடிப்படைக் கணினி அறிவு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயலமர்வுகளை நாம் நடாத்தி வருகின்றோம்.
அந்த வகையில் பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று அங்கு தொழில்நுட்பக்கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி இளம் சமுதாயத்தினரின் ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் அவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் பாடத்தேர்வுகளுக்கும் எமது செயலமர்வுகள் பெரிதும் உதவியாக அமையும் என்பதே எமது நோக்கமாகும்.
அதற்கிணங்க உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு முதலைக்குடா மகா வித்தியாலத்தில் இடம்பெற்றதோடு 30 மாணவர்கள் கலந்துகொண்டு தமக்கான தொழிற்கல்வியின் அவசியம் பற்றிய அறிவினையும் பெற்றுக்கொண்டனர். அத்தோடு அவர்களுக்கு வாழ்க்கைத்திறன் பயிற்சியும் வழங்கப்பட்டமை சிறப்பானதாகும்.
இச் செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது நிதி அனுசரணையை வழங்கிய கனடாவில் வசிக்கும் திரு.கோபால் பகீரதன் அவர்களுக்கு விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.