எமது அறக்கட்டளையின் ஒருங்கிணைப்புடன் எமது அறக்கட்டளை புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் முல்லைதீவு புதுக்குடியிருப்பில் 2 நிலையங்கள் செயற்பட்டு வருகின்றது.
மாணவர்களின் வலுவூட்டலுக்காக அன்னை ஶ்ரீ சாரதா நிலையமும், இளைஞர்களின் வலுவூட்டலுக்காக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியும் செயற்படுகின்றது. அவற்றின் காலாண்டு செயற்பாடுகளை கண்காணிக்கவும், அவற்றினை மேம்படுத்தவும் எமது சமூகப்பணியாளர்களினால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
அன்னை சாரதா நிலையத்தில் தரம் 8 இல் இருந்து தரம் 13 வரை 60 மாணவிகள் உள்ளனர். அவர்களில் தற்போது 10 பேர் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். யோகா, கராட்டே, பயிற்சிகளுடன் தற்போது சிலம்பு பயிற்சியும் வழங்கப்பட்டு மாகாண போட்டிக்கு மாணவிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
இங்கு அவர்களிற்கு அத்தியாவசியமான தேவைகளாக..
மதிய உணவின் பின்னர் மேலதிக வகுப்புக்கள் நடைபெறுகின்றது. அதற்கான ஆசிரியர்களிற்கான கொடுப்பனவு மாதாந்தம் தேவையாக உள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2 ஏக்கர் காணியில் தற்போது இந் நிலையத்திற்கான நிரந்தர கட்டம் அமைக்கும் பணி ஆரம்பித்திருப்பதால் அதற்கான நிதியுதவி தேவையாக உள்ளது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது தற்போது அங்குள்ள இளைஞர்களிற்கான தொழிற்பாதையினை வடிவமைக்கவும், அவர்களின் மனநிலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தவும் பாடசாலைக் கல்வியில் இடைவிலகிய சாதாரணதரம், உயர்தரம் சித்தியடையாத இளைஞர்களிற்கான வாழ்வியல் மேம்பாட்டுப் பயிற்சியினை நடாத்தி வருவதுடன், அடிப்படையான கணினி மற்றும் ஆங்கில மொழி விருத்தி பயிற்சிகளுடன், பெண்களுக்காக தையல், மற்றும் ஆரி வேக் பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது.
இங்கு பயிற்சி நெறிகள் பற்றிய தெளிவூட்டலை அங்குள்ள இளைஞர்களிற்கு வழங்கவேண்டியுள்ளதுடன், சில புலமைப்பரிசில் முறைகளின் ஊடாக இலவசப் பயிற்சி மற்றும் தொழில் முயற்சிகளிற்கான உதவிகளை வழங்குவதன் ஊடாக இளைஞர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம்.