முப்பது ஆண்டுகளாக மகத்தான சேவையை வழங்கி வரும் சமூக நலன்புரி அமைப்பு , கடந்த 12 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளை வலுவூட்டியதன் மூலம் சமூக பொருளாதார மாற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மற்றும் விவேகானந்த பூங்கா ஆகியவற்றின் ஸ்தாபகராகிய திரு.கந்தப்பன் சற்குணேஸ்வரன் அவர்கள் இலங்கைக்கான தமது விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார்.
அந்தவகையில் இங்கு நடைபெற்ற செயற்பாடுகளைப் பார்வையிடும் வண்ணம் விவேகானந்த பூங்காவினைப் பார்வையிட்டதோடு மட்டுமன்றி விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரிக்கான வருகையை அடுத்து சுவாமி விவேகானந்தருக்கான பூஜைகளைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரநடுகையும் இடம்பெற்றது.
கல்லூரியின் செயற்பாடுகள் மற்றும் சமூக நலன்புரியமைப்பின் செயற்பாடுகளையும் ஸ்தாபகர் பார்வையிட்டதுடன் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலும் இடம் பெற்றது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்தாபகரின் அறிமுகம் இடம்பெற்று மாணவர்களுக்கான சமூக மாற்றம் தொடர்பான தெளிவூட்டலும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வரலாறும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது.
விவேகானந்த குடும்பத்தின் சேவையாளர்களால் ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களது தன்னலமற்ற சேவையைப் பாராட்டி நினைவுச்சின்னம் மற்றும் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டமை சிறப்பானதாகும்.