விவேகானந்த பூங்கா திறப்பு விழா

சுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கிணங்க “உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே இருக்கின்றன ; நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்” அந்த வகையில் சமூக நலன்புரி அமைப்பு, திலகவதியார் மகளிர் இல்லம் மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஸ்தாபகர் சமூகதீபம் திரு.க.சற்குணேஸ்வரன் ஐயா அவர்களின் எண்ணங்களின் வலிமையின் வழியே உருவாகிய எமது விவேகானந்த பூங்காவின் திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது.

உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன்களின் தலைவர் அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத் கௌதமானந்தஜி மகராஜ் அவர்களின் பரிபூரண ஆசிர்வாதத்துடன் இராமகிருஷ்ண மிஷன் தஞ்சாவூரிலிருந்து தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தாஜி மகராஜ் கொழும்பு மிஷனிலிருந்து ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தாஜி மகராஜ் மற்றும் ஸ்ரீமத் சுவாமி இராஜேஸ்வரானந்தாஜி மகராஜ் , மட்டக்களப்பு கல்லடியிலிருந்து பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் மற்றும் உதவி முகாமையாளர் சுரார்ச்சிதானந்தாஜி ஆகிய சுவாமிஜிகளின் நேரடி ஆசியுடன் ஐயனார் ஆலயத்திலிருந்து அனைவரும் வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு பூங்கா வரையிலான நடைபவனி இடம்பெற்று 30 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை மற்றும் நினைவுக்கல் திறந்து வைக்கப்பட்டது. சுவாமி விபுலானந்தர், சுவாமி ஜீவானந்தாஜி, சுவாமி நடராஜானந்தாஜி, சகோதரி நிவேதிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளும் திறக்கப்பட்டதோடு ஏனைய துறவிகளின் பெயர்களைத் தாங்கிய 10 இல்லங்கள் ஸ்ரீமத் சுவாமி மாத்ருசேவனாந்தர் அவர்களுடன் அதற்கான நிதியுதவிகளை வழங்கிய நன்கொடையாளர்கள் மூலம் திறந்து வைக்கப்பட்டு விவேகானந்த பூங்கா திறப்புவிழா இனிதே நடைபெற்றது.

இராமகிருஸ்ண மடத்துறவிகள் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கான விஜயத்தையும் மேற்கொண்டிருந்ததுடன் எமது அனைத்து செயற்பாடுகளையும் கேட்டறிந்து பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள சீ மூன் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் விவேகானந்த பூங்காவிற்கான நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்களும் கௌரவிக்கப்பட்டதோடு ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் ஐயா அவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் உயரிய விருதாகிய “விவேகானந்த விருது” வழங்கப்பட்டு சுவாமிஜிகளால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே விவேகானந்த பூங்காவின் நன்கொடையாளர்கள் மற்றும் விபரங்களை உள்ளடக்கிய “விஸ்வரூபம்” மலர் வெளியீடு இடம்பெற்றமை சிறப்பானதாகும்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தட்சிணகௌரி தினேஷ், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர்.பேராசிரியர்.மா.செல்வராஜா, ஸ்ரீ சத்ய சாயி சஞ்ஜீவனி வைத்திய சாலை வைத்தியகலாநிதி.தி.சுந்தரேசன், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ். புவனேந்திரன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திரு.யோ.சர்வேஸ்வரன், சிரேஷ்ட நன்னடத்தை அதிகாரி திரு.சி.சிவகுமார், பதுளை மலையக சிறுமிகள் இல்லத் தலைவர் திரு.எஸ்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரது பிரசன்னத்துடன் எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் உள்ளிட்ட எமது அமைப்புகளின் முகாமையாளர்கள், இணைப்பாளர்கள், விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரி மாணவர்கள், முல்லைதீவு அன்னை ஸ்ரீ சாரதா நிலையம், பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்ல மாணவிகள், ஸ்ரீராமகிருஷ்ண மிஷனின் மாணவ மாணவிகள் உள்ளடங்கலாக விவேகானந்த குடும்பத்தினரும் இணைந்து சிறப்பான முறையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சமூக நலன்புரி அமைப்பின் ஒரு செயற்பாடாக திறந்து வைக்கப்பட்ட எமது விவேகானந்த பூங்காவானது எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த ஒரு தடமாகவும் காலத்தால் அழியாத நிர்மாணிப்பாகவும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த வித மாற்றமுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *