விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமை கோட்டின் கீழ் வாழும் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க”கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்” என்னும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தில் அடிப்படைத் தேவையாக உள்ள கல்வி, கலாச்சார, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்களிற்கான மாதாந்த உதவித்திட்டம், அடிப்படைக் கணிணி வகுப்புகள், அறநெறிக்கான கல்வி உபகரணங்கள், வாழ்வியல் பயிற்சி செயலமர்வுகள், சாதாரண தரம் மற்றும் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் என எமது பல்வேறு செயற்றிட்டங்களை உள்ளடக்கியதாக காணப்படுவது சிறப்பம்சமாகும்.
அந்த வகையில் மாவிலங்கத்துறை கிராமத்துடனான எமது அறக்கட்டளையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் சம்பந்தமாக ஆலோசிக்கும் வகையில் மாவிலங்கத்துறை கிராம சேவையாளர் தலைமையிலான கலந்துரையாடல் அக்கிராமத்தில் இடம்பெற்றது.
மாவிலங்கத்துறை கிராமத்தின் ஆலய தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர், மாதர் சங்கம், சமூர்த்தி சங்கம், இளைஞர் கழகம், விளையாட்டுக் கழகம், சுய உதவிக் குழு, கிராமசக்தி சங்கம், முதியோர் சங்கம், மீனவர் சங்கம், சமூக நலன்புரி சங்கம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் என அனைத்து குழுத் தலைவர்களும் பொது மக்களும் கலந்துகொண்டதோடு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்டமுகாமையாளர் உட்பட்ட சமூகப்பணி சேவையாளர்களும் கலந்து கொண்டனர்.
மாவிலங்கத்துறை கிராமத்தில் காணப்படும் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்களுடன், எமது அடுத்த கட்ட நடவடிக்கை அடுத்து எமது அறக்கட்டளையால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற செயற்பாடுகளையும் உள்ளடக்கிய ஓர் அறிமுக கலந்துரையாடலாக இடம்பெற்றது.