இயற்கையின் சீற்றங்கள் தவிர்க்கப்பட முடியாதவை. ஆனாலும் அதன் பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கும் வண்ணம் எம்மை நாமே தயார்படுத்திக்கொள்வது எமது கடமைப்பாடாகும். அந்த வகையில் தொடரும் கனமழை காரணமாக வெள்ளத்தினால் அவதியுறும் எம் மக்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை வழங்கும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக இலண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் இன்றைய நிகழ்வு இடம்பெற்றது
கோறளைப்பற்றுப் பிரதேச செயலாளர் திரு.ராஜ்பாபு அவர்கள், இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அவர்கள், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிதிப்பணிப்பாளர், திட்டமுகாமையாளர், உள்ளிட்ட அறக்கட்டளையின் சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை சிறப்பானதாகும்.
கிரான், சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை ஆகிய மூன்று பிரதேசங்களிலும் முற்றுமுழுதாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, விசேட தேவையுடையவர்களையுள்ளடக்கிய குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் போன்றவை பிரதேச செயலகத்தினூடாக அடையாளப்படுத்தப்பட்டு பிரதேச செயலாளரின் நேரடி ஏற்பாட்டில் தயார்படுத்தப்பட்டதோடு அவர்களுடைய பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று அவர்களுக்கான உலர் உணவு நிவாரணப்பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.
காலத்தின் தேவைகருதி எமது செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்கான நிதி அனுசரணையை வழங்கி எமக்குக் கரம் கொடுத்த இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினருக்கு நாம் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.