பல தலைமுறைகள் தாண்டியதோர் நிலைத்திருப்பு, உங்கள் பெயரால் ஓர் மரம்..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது தனிமனித வலுவூட்டலினூடாக சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.அவ்வாறே இயற்கை அன்னைக்கான எமது பங்களிப்பினை வழங்கும் முகமாக பூமியைக் குளிர்விப்பதற்காக பசுமைப்புரட்சி எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகளை வழங்குதல் மற்றும் நடுதல் என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக குறைந்தது 500 மரக்கன்றுகளையாவது நடுதல் அல்லது வழங்குதல் மூலம் இந்த ஆண்டிற்கான செயற்பாடாக முன்னெடுக்க வேண்டுமென்ற திட்டத்திற்கிணங்க அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் ஜனன தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் எமது புதிய திட்டமானது அமுல்படுத்தப்பட்டது. அதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டதோடு அடுத்த கட்டமாக திருப்பழுகாமத்தில் அமைந்துள்ள திலகவதியார் இல்லத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திலும் மாணவிகள் ஒவ்வொருவர்க்கும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு நிலைய வளாகத்தினுள்ளும் மரநடுகை இடம்பெற்றதோடு அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் ஜனன தினமும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதற்காக ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் எமது சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இயற்கையானது இறைவனால் எமக்கு அளிக்கப்பட்ட பாரியதொரு கொடையாகும். அதனைப் பேணிப் பாதுகாப்பது எம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். நாம் எமது வாழ்நாளில் ஒரு மரமேனும் நடுவது பல தலைமுறைகளைத் தாண்டியும் எமது உதவி நிலைத்திருப்பதற்கான ஓர் அடித்தளமாகும். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் ஒரு மரத்திற்காக செலவிடும் ஐந்நூறு ( 500 LKR ) ரூபாயானது நாளை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவியாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லையாதலால் இன்றே எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *