மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினூடாக செங்கலடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, பின்தங்கிய பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களில் தமது குடும்பப் பொருளாதார சூழ்நிலையின் காரணமாகப் பாடசாலைக்கல்வியைத் தொடரமுடியாத நிலையிலுள்ளவர்கள் மற்றும் கல்விக்கான உபகரணங்கள், பிரத்தியேக வகுப்புகள் போன்ற மேலதிக தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் கல்வியை இடைநிறுத்த எத்தனிக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக அவர்களைப் பொறுப்பெடுத்து புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாதாந்தம் அவர்களது கல்விக்கான மேலதிக உதவித்தொகை வழங்கும் திட்டமானது முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் வேப்பவெட்டுவான், இலுப்பட்டிச்சேனை, கரடியனாறு போன்ற பிரதேசங்களுக்கு களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு மேலும் ஐந்து மாணவர்கள் பொறுப்பெடுக்கப்பட்டு, அவர்களுக்கான முதற்கட்ட தொகையானது வழங்கி வைக்கப்பட்டது.
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டமுகாமையாளர் உள்ளிட்ட களப்பணியாளர்களும் சேவையாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச்செயற்பாட்டிற்காக எமக்கு கரம் கொடுத்து இம்மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான உதவியை வழங்க முன்வந்தமைக்கு இலண்டனில் வசிக்கும் எமது அறக்கட்டளை உறவான திரு.சி.செந்தில்செல்வன் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.