வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் நெறி நின்று, அவரது கம்பீரமொத்த தோற்றம் கொண்டு, அவர் தம் உருவச்சிலையைத் தமது அடையாளமாகக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் தரம் கண்டு புதுக்குடியிருப்பு நகர் தன்னில் சுவாமியின் நாமத்தைத் தாங்கி நின்று கொண்டிருக்கும் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி இன்று தனது 12 வது அகவை தினத்தை செவ்வனே கடக்கின்றது.
எமது கல்லூரியின் ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களின் வழியே எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் முகாமைத்துவத்தில் மிகவும் திறம்பட நடத்தாப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தொழில்நுட்பவியல் கல்லூரியின் அகவை தினமானது சமூக நலன்புரி அமைப்பு, கல்லூரியின் சேவையாளர்கள், விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, மற்றும் அமிர்தா நிறுவனம் உள்ளிட்ட விவேகானந்த குடும்பத்தின் அனைத்து சேவையாளர்களும் இணைந்து மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் காலநிலை பற்றிய ஒரு விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் வண்ணம் கல்லூரி மாணவர்களால் சிறப்பான முறையில் வீதி நாடகம் ஒன்று களுவாஞ்சிக்குடி பொது பேரூந்து தரிப்பு நிலையத்தில் அரங்கேற்றப்பட்டு, கிரான்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள விவேகானந்த பூங்காவில் மரநடுகையும் இடம்பெற்றதோடு எமது கல்லூரியில் அகவை தினமும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு கல்லூரியின் கடந்து வந்த பாதை, மாணவர்களின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் எமது பணிப்பாளரால் மிகவும் சிறப்பான முறையில் எடுத்துரைக்கப்பட்டு இனிதே நிறைவுற்றது.
பன்னிரு ஆண்டு கடந்து காலங்கள் மாறினாலும், தொழிலுக்கான வழிகாட்டலூடாக சமூகப் பொருளாதார மாற்றத்தை நோக்கிய எம் கல்லூரியின் பணியானது கடலளவாய் மாணவரைக் கரைசேர்க்கும் என்பதில் கடுகளவும் மாற்றமில்லை !